20/05/2026
குற்றவியல் நடைமுறைச் சட்டம் CrPC 110 பிரிவை பயன்படுத்தும் அதிகாரம் காவல்துறைக்கு இல்லை ஆனால் என்ன நடக்கிறது..!
வழக்கமாக குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் Habitual Offenders இனி நாங்கள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கமாட்டோம் என்று கோட்டாட்சியர் அவர்களிடம் உறுதி அளிப்பது தொடர்பாக விவரிக்கிறது குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு CrPC 110 .
வழக்குகள் உள்ள நபர் வழக்கமாக குற்றம் செய்யும் நபர் Habitual Offender இரண்டு பிரிவுக்கும் வித்தியாசம் உண்டு. ஆனால் ஒருவர் மீது வழக்குகள் நிலுவையில் இருந்தாலே போதும் உடனே இந்த சட்டப்பிரிவை அவர்கள் மீது பயன்படுத்துகிறது காவல்துறை .
குறிப்பாக எளிய பின்னணி கொண்ட மக்களையே குறி வைக்கும் காவல் துறை தங்கள் அதிகாரத்தை மீறி செயல்படுவது வாடிக்கையாக வைத்து இருக்கிறது. இந்த சட்டம் சரியாக பின்பற்றப்படுகிறதா ஒருவர் மீது CrPC110 கீழ் எப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் காவல்துறைக்கு அந்த அதிகாரம் இருக்கிறதா..!
இந்த 110 பிரிவை பொறுத்தவரை சட்டம் 1% அதிகாரத்தை கூட காவல் துறைக்கு அளிக்கவில்லை..
அவர்களுக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் பணி என்பது சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்க கூடியவர்கள் என்று வழக்கமாக குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை மட்டும் அடையாளம் கண்டு கோட்டாட்சியர் அவர்களிடம் பட்டியலை சமர்ப்பிப்பது மட்டுமே.
அந்த பட்டியலை எந்த அடிப்படையில் தயாரிக்க வேண்டும்.
தனிநபர் விபரம் :
சாதி , வாழ்வாதாரம் , அந்த நபரின் குடும்ப உறுப்பினர்கள் , அவரின் வருமானம் , அவரின் சொத்து மதிப்பு
ஆகியவற்றை சேகரிக்க வேண்டும் .
வாழ்க்கைமுறை :
பட்டியலில் சேர்க்கப்பட்டு இருக்கும் நபர் வீட்டில் இயல்பாக வசிக்கிறாரா இல்லை தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறாரா இரவு நேரங்களில் மட்டும் வீட்டுக்கு வருகிறாரா ? என்பதை அந்த பகுதியில் இருக்கும் நபர்களிடம் கேட்டு தெரிந்துக்கொள்ள வேண்டும் இந்த தகவல்கள் வெறும் செவிவழி செய்தியாகமட்டுமே இருத்தல் கூடாது தலைமறைவு வாழக்கை வாழ்வதற்கான உறுதியான ஆதாரங்கள் தேவை .
நட்பு வட்டாரம் :
பட்டியலில் சேர்க்கப்பட்டு இருக்கும் நபர் யாரை சந்திக்கிறார் சந்திக்கும் அந்த நபரின் குற்றப்பின்னணி என்ன அவர் வீட்டுக்கு வரும் நபர்கள் யார் ஏதாவது சதி செயல்களில் ஈடுபடுகிறாரா என்பதை கண்டறிய வேண்டும் .
குற்ற பின்னணி :
பட்டியலில் இருக்கும் நபரின் குற்ற பின்னணி குறிப்பாக ஏற்கனவே தண்டனை பெற்ற நபரா என்பதையும் கண்டறிய வேண்டும் . இதோடு சேர்த்து காவல்துறை சில குறிப்புகளை எழுத வேண்டும் .
மேற்சொன்ன குறிப்புகளுக்கு ஆதரவாக இரண்டு சாட்சிகளும் இருக்க வேண்டும். அதை தொடர்ந்து CrPC 107 இன் கீழ் கோட்டாட்சியர் அவர்கள் ஏன் உங்கள் மீது Crpc 110 கீழ் நடவடிக்கை எடுக்க கூடாது என்று சம்பந்தப்பட்ட நபரிடம் அறிவிப்பு / விளக்கம் கேட்கவேண்டும் .
இதற்கு பதில் அளிக்க சம்மந்தப்பட்ட நபருக்கு வாய்ப்பு வழங்கவேண்டும் .
எழுத்துவடிவில் மறுப்பு சொல்லவும் வாய்மொழியாக மறுப்பு சொல்லவும் அவருக்கு உரிமை உண்டு .
ஒருவேளை காவல் துறை தவறான தகவல்கள் அடிப்படையில் கோட்டாட்சியரிடம் பட்டியலை சமரிப்பித்து இருந்தால் விசாரணை முடிவில் சம்பந்தப்பட்ட நபர் மீது 110 பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பிக்கலாம் .
இந்த 110 பிரிவு வழக்கமாக குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமே பொருந்தும் .
ஒருவரை 110 பிரிவின் கீழ் கொண்டுவர காவல்துறை பட்டியல் தயாரிக்கும் போது அந்த நபர் குறித்து ஆய்வுகளை செய்யவேண்டும். காவல்துறை அவர் சொன்னார் இவர் சொன்னார் என்றெல்லாம் காதில் கேட்டதை வைத்து முடிவு செய்யக்கூடாது .
ஆனால் தமிழ்நாட்டில் Crpc 110 ஒரு சடங்கு போல தான் நடந்துக்கொண்டு இருக்கிறது. பிரிவு 110 இன் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என்று விளக்கம் கேட்டு அறிவிப்பு /நோட்டீஸ் பெரும்பாலும் அனுப்பபடுவதில்லை .
காவல்துறையை சேர்ந்தவர்களே தொலைபேசியில் 110 போடவேண்டி இருக்கிறது கோட்டாட்சியர் அலுவலகம் வா என்று அழைப்பு கொடுக்கிறார்கள்..( சட்ட மீறல் )
பெரும்பாலும் அழைக்கப்படும் நபர்களிடம் எந்த விளக்கமும் கேட்காமல் கோட்டாட்சியரால் 110 நடைமுறைப்படுத்தப்படுகிறது.
உடனே ஓராண்டு காலம் எந்த குற்றச்செயலிலும் ஈடுபடமாட்டேன் என்று உறுதிமொழி/ உறுதி பத்திரம் கொடுக்க பட்டதாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது .
இந்த காலத்தில் ஒரு பொய் வழக்கை காவல்துறை பதிவு செய்யும் பட்சத்தில் CrPC 122 (1)(b) யை பயன்படுத்தி உறுதி பத்திரத்தை மீறியதற்காக ஓர் ஆண்டுகாலம் வரை தடுப்பு காவலில் வைக்கவும் நடவடிக்கை எடுக்க முடியும் .
இந்த CrPC 110 பிரிவை குற்றம் செய்வதையே தொழிலாக கொண்டு இருப்பவர்கள் மீது பெரும்பாலும் ஏவ முடிவதில்லை காரணம் தொடர் குற்றம் செய்பவர்கள் தொலைபேசி எண்களை மாற்றிவிட்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார்கள் .
ஆனால் பொது வாழ்க்கையில் இருப்பவர்களை நிரந்தரமாக குடும்பத்தோடு வசிப்பவர்களை குறி வைத்து காவல்துறை Cr pc 110 பிரிவை ஏவி விடுகிறது.
அதவாது தங்களுக்கு 1% கூட அதிகாரம் இல்லாத சட்டப்பிரிவை பயன்படுத்தி எளிய மக்களை வஞ்சித்தி வருகிறது.கோட்டாட்சியர் அவர்களின் அதிகாரத்திற்கு உட்பட்ட ஒன்றை சட்ட வரம்புகளை மீறி காவல்துறை அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு செயல்படுவது வருத்தம் அளிக்கிறது காவல் துறையின் இப்படிப்பட்ட சட்ட மீறல்களை என்னசெய்யபோகிறோம்
மாநகராட்சி பகுதிகளில் காவல் துறை துணை ஆணையர்களுக்கு crpc 110 பிரிவை பயன்படுத்தும் அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது அதுவும் காவல்துறை அதிகாரியாக அல்ல நிர்வாகதுறை நடுவராக வழங்கப்படுகிறது.