16/08/2012
சட்டவிரோத துப்பாக்கி விற்பனை: அறிக்கை அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
புது தில்லி, ஜூலை 24:÷சட்டவிரோதமாக ராணுவத் துப்பாக்கிகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பான விசாரணை குறித்த விவரங்களை அளிக்கும்படி மத்திய அரசுக்கும், ராஜஸ்தான் மாநில அரசுக்கும் உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
ராஜஸ்தானின் கங்காநகர் பகுதியில் துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமங்கள், முறையாக பரிசீலிக்கப்படாமல் தீவிரவாதிகள், கடத்தல்காரர்கள், சமூகவிரோதிகளுக்கு அளிக்கப்பட்டதாக 2007-ம் ஆண்டு தெரியவந்தது. இதையடுத்து நடந்த விசாரணையில், இந்த முறைகேட்டில் ராணுவ அதிகாரிகளுக்கும், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
ஆயுதக் கிடங்கிலிருந்து ராணுவ அதிகாரிகளுக்கு, அவர்களது சொந்தப் பாதுகாப்புக்காக துப்பாக்கிகள் வழங்கப்படும். இந்த ஆயுதங்களைத்தான் சட்டவிரோதமாக சமூக விரோதிகளுக்கு விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக துப்பாக்கி உரிமம் பெற்ற 284 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதைத் தொடர்ந்து சட்டவிரோத ஆயுத விற்பனை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.நிஜ்ஜார், எச்.எல்.கோகலே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அப்போது, சட்டவிரோத ஆயுத விற்பனை தொடர்பான விசராணை விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கும், ராஜஸ்தான் மாநில அரசுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கின் விசாரணை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.