16/07/2022
பெண்கள் தாலியை கழற்றினால் அது கணவருக்கு செய்யும் கொடுமையாகும். விவாகரத்து வழங்கலாம் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு. தாலி பெண்களுக்கு வேலியா? இது ஆணாதிக்க சிந்தனை கொண்ட தீர்ப்பு.
நீதிபதிகள் விஎம் வேலுமணி, எஸ்.சவுந்தர் அடங்கிய அமர்வின் முன் விவாகரத்து வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. ஈரோடு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக உள்ள சி.சிவகுமார் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து கோரியிருந்தார். ஆனால், அவரது விவாகரத்து மனுவை கடந்த 2016-ஆம் ஆண்டு குடும்பநல நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை ரத்து செய்யக் கோரி சிவகுமார் உயர் நீதிமன்றத்தை அனுகினார்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சிவகுமாரின் மனைவியிடம் நடந்த விசாரணையின்போது, அவர் தாலியை கழட்டிவைத்தது உண்மைதான் என ஒப்புக் கொண்டார். தாலி செயினை மட்டுமே லாக்கரில் வைத்துள்ளதாகவும், தாலி தன்னிடமே உள்ளதாகவும் கூறினார். இருப்பினும், தாலியை கழட்டிவைக்கும் செயலே கவனிக்கத்தக்கது என்று நீதிமன்றம் கூறியது.
முன்னதாக, அந்தப் பெண்ணின் வழக்கறிஞர் "இந்து திருமண சட்டம் 7ஐ சுட்டிக்காட்டி தாலி கட்டுவது அவசியமில்லை. ஆகையால் ஒருவேளை தனது கட்சிக்காரர் அவ்வாறு செய்திருந்தாலும் கூட அது திருமண வாழ்வில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது" என்று வாதிட்டார்.
அதற்கு நீதிபதிகள், " நம் நாட்டில் தாலி கட்டுவது திருமண வைபவத்தில் ஒரு முக்கிய சடங்காக இருக்கிறதே" என்று சுட்டிக் காட்டினர்.
மேலும் நீதிபதிகள் கூறுகையில், "இந்த வழக்கில் உள்ள ஆவணங்களைப் பார்க்கும்போது சம்பந்தப்பட்ட பெண் தாலியை கழட்டி வைத்ததை தெளிவாக ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்துப் பெண் எவருமே கணவன் உயிருடன் இருக்கும்போது தாலியை கழட்டி வைக்கமாட்டார். அது ஒரு புனித அடையாளமாக இருக்கிறது. திருமண வாழ்க்கை தொடர்வதையே அது குறிக்கிறது. கணவனின் மரணத்திற்குப் பின்னரே இந்துப் பெண்கள் தாலியை அகற்றுகின்றனர். அதனால் வழக்கை தாக்கல் செய்தவர் கூறியதுபோல் இது அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கும்.
தாலியை அகற்றியது மட்டுமே திருமண பந்தத்தை முறித்துவிடும் என்று நாங்கள் கூறவில்லை. ஆனால், தாலியை அகற்றியது இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியிருப்பது நிரூபணமாகிறது. மேலும், இத்தம்பதி கடந்த 2011 ஆம் ஆண்டு முதலே பிரிந்துதான் வாழ்கின்றனர். அதனால் அவர்கள் எவ்வித சமாதானத்துக்கும் தயாராக இல்லை என்பது தெரிகிறது. இதனால் கீழமை நீதிமன்ற உத்தரவை தள்ளுபடி செய்து இத்தம்பதிக்கு நீதிமன்றம் விவாகரத்து வழங்குகிறது" என்றனர்.
C. M. A. No. 3249/2017
Dated - 5.7.2022
C. Sivakumar Vs A. Srividhya
இந்த தீர்ப்பு ஆணாதிக்க சிந்தனையுடன் சொல்லப்பட்ட தீர்ப்பாகவே கருதுகிறேன்.
கணவன் இறந்தவுடன் மனைவியைக் கட்டாயப்படுத்தி, அவன் பிணம் எரியும் நெருப்பில் அவளைத் தள்ளிக் கொல்லும் உடன்கட்டை ஏறுதல், பருவமடையாத பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைப்பது, அக்குழந்தையின் கணவன் இறந்துவிட்டால், ஆயுள்வரை அப்பெண் விதவையாக இருந்து அழிவது, கோயில்களில் நிலக்கிழார்கள், மைனர்கள் போன்றவர்களின் வரம்பற்ற பாலுறவுக்காக தேவதாசிகளாகப் பெண்களுக்குப் பொட்டுக்கட்டி விடுவது போன்ற எத்தனையோ பெண்ணடிமைத்தன நிகழ்வுகள் புனிதச் சடங்கு என்ற பெயரில் இந்து மதத்தில் இருந்தன. இந்து மதத்தைச் சேர்ந்த இராஜாராம் மோகன்ராய், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி போன்ற எத்தனையோ பேர் முயன்று போராடி, இவற்றையெல்லாம் தடை செய்யும் சட்டங்கள் வரச் செய்தனர்.
தாலி என்பது கடந்த காலத்தில், ஏன் சங்க காலத்தில்கூடத் தமிழர்கள் திருமணத்தில் இடம் பெற்றுள்ளது. அப்பொழுது, இந்து மதம் கிடையாது. ஆனால், இன்று பெண்ணுக்குத் தாலி போடுவது ஆணாதிக்கத்தின் அடையாளம் தவிர, வேறல்ல. பெண்களுக்கு கடிவாளம் ஆண்கள் அணிவிக்கும் தாலி என்றால் ஆண்களுக்கான கடிவாளம் என்ன?
அட்வகேட் அர்ச்சனா,
மதுரை.
செல் - 9597813018